Climate variability and Water security

கொழும்பு முன்னேற்ற உரையாடல்

‘முன்னேற்றம்’ நம் அனைவரையும் உடனே கவர்ந்திழுக்கும் ஒரு சொல். தனிநபர், சமூகம், நாடு என்று நாம் அதைப்பற்றி பேசாத, சிந்திக்காத தருணங்கள் மிக குறைவு. அந்த முன்னேற்றம் சகல துறைகளிலும் அவசியம். அந்தவகையில், ‘நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாறுபாட்டுதன்மை’ என்கிற தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த 31 ஆகஸ்ட் 2018 அன்று கொழும்பில் இடம்பெற்றது. UNDP மற்றும் LSE-SAC இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

“innovate to survive” என்பது இதன் பிரதான தொனிப்பொருளாக அமைந்தது. ஓர் சமூகமாக நாம் பிழைக்கவும், தழைக்கவும் வேண்டும் என்றால், புத்தாக்க சிந்தனை மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகிறது. ஆகவே, அரசு சார்ந்த / சார்பற்ற தேசிய மற்றும் சர்வதேச வளவாளர்களை ஒன்றிணைத்து, நாடளாவிய / பிராந்திய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதே இந்த அமர்வின் நோக்கமாயிருந்தது.  

நீர் முகாமைத்துவ நிபுணரான Dr.Timotheus Gaasbeek, ஒலிவாங்கியை கையில் எடுத்து,

“இலங்கை இதுவரை பல உலர் மற்றும் ஈர காலநிலை கட்டங்களை கடந்து வந்திருக்கிறது; நாம் இப்போது ஒரு ஈரமான காலகட்டத்தில் இருக்கிறோம்” என்றார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போனார்கள். காரணம், ‘ஈரமான’ காலநிலையே இப்படி இருக்கிறது என்றால், ‘உலர்’ காலம் எப்படி இருக்கும் என்கிற சிந்தனை. இப்படியாக,

·         டாக்டர். திமோத்தியெஸ் கெஸ்பீக் (Dr Timotheus Gaasbeek)

·         டாக்டர். பி. பி. தர்மசேன தர்மசேன (Dr P. B. Dharmasena)

·         டாக்டர். சௌம்யா பாலசுப்ரமண்ய (Dr Soumya Balasubramanya)

·         டாக்டர். கிரிராஜ் அமர்னாத் (Dr Giriraj Armarnath)

ஆகிய நான்கு பிரதான வளவாளர்களின் உரைகள் இடம்பெற்றன. இவர்களின் மூலம், ஏகப்பட்ட தகவல்களும், புள்ளிவிபரங்களும் இந்த அமர்வில் பகிரப்பட்டன.

டாக்டர். திமோத்தியெஸ் கெஸ்பீக், தொடர்ந்து பேசுகையில், தனது அவதானிப்பின்படி, நுவரெலியா மாவட்டம் வறட்சியானதாகவும், கொழும்பு ஈரவலயமாக மாறி வருவதையும் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட மழைக்காடுகள் அழிந்து வருவதையும், தென்மேல் பருவப்பெயர்ச்சி மேகங்கள், மத்தியநாட்டினை அடையும் முன்னரே – கொழும்பில் மழைநீரை இழப்பதனையும் குறிப்பிட்டார். கொழும்பில் வசிப்பவனும், நுவரெலியாவிற்கு அடிக்கடி பயணிப்பவனும் என்கிற முறையில் இந்த தகவல் என்னை மிகவும் சிந்திக்க செய்தது.

இலங்கை விவசாய ஆய்வு திணைக்களத்தின் பிரதி அதிபர் டாக்டர். பி. பி. தர்மசேன தர்மசேன அவர்கள், இலங்கையின் புராதன நீர்ப்பாசன கட்டமைப்பு பற்றிய புகழாரங்களுடன் பேச்சினை ஆரம்பித்தார். அங்கிருந்த அனேகரை போல நானும் அப்படியே பெருமையின் மிதப்பில் இருந்தேன். ஆனால், இன்றைய இலங்கை பற்றியும், குறிப்பாக, வடமத்தியம் அல்லாத ஏனைய இடங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தன.

“இலங்கையின் மொத்த மழைவீழ்ச்சியின் 5௦% எதற்கும் பயன்படாமல் கடலில் சேர்கிறது; இதில் களனி, களு கங்கை மற்றும் கின் கங்கை ஆகிய நீரோட்டங்கள் அதிகளவிலான நீரை பயன்பாடின்றி கடலுக்கு இரைக்கின்றன. இதற்கு காரணம் நீர்த்தேக்கங்களின் பற்றாக்குறையே” என்றார்.

அவரது உரை பிரதானமாக இலங்கையின் நீர் கட்டமைப்பு பற்றியதாக இருந்தது. எமது நாடு ஒரு வருடத்திற்கு சராசரியாக 2௦௦௦mm மழையை பெறுகின்றது. இதன் மொத்த கனவளவு 131.22 பில்லியன் m3. அதன்படி ஒரு இலங்கையருக்கு சராசரியாக 619௦ m3 அளவிலான நீர் பிரிகையடைய வேண்டும். ஆனால் இந்த அளவானது, கொழும்பு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 5௦௦m3 இலும் குறைவான அளவிலும், பொலன்னறுவையில் 6888m3 ஆகவும் காணப்படுகிறது. இந்த தகவலானது, நீர் முகாமைத்துவத்தின் அவசியத்தை நன்கு உணரச்செய்யும் விதமாக அமைந்திருந்தது.

சிறந்த நீர் முகாமைத்துவம் என்பது ‘வறட்சி’, ‘வெள்ளம்’ இரண்டையும் சமாளிக்கும் விதமாக இருக்க வேண்டும்”

-என்கிற வசனம், அண்மைக்கால வரலாற்றில் கொழும்பு சந்தித்த வெள்ளத்தையும், பிற பகுதிகள் சந்தித்து வரும் வறட்சியையும் நினைவூட்டின.

நீர் முகாமைத்துவ ஆய்வாளரான டாக்டர். சௌம்யா பாலசுப்ரமண்ய பிரதிநிதித்துவம் வாயிலும், கருத்துக்கள் வாயிலாகவும் கலந்துரையாடலுக்கு பெண்ணியம் சேர்த்தார். இலங்கையில் 33% பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதனால், நீர் முகாமைத்துவம் பற்றி பெண்களை பயிற்றுவித்தலின் முக்கியத்துவம் அவரால் வலியுறுத்தப்பட்டது. ஆண்கள் மூலமாக பெண்களிடம் விழிப்புணர்வும், பயிற்சியும் கொண்டு சேர்க்கப்படுவது பிரயோக ரீதியில் சாத்தியம் குறைந்தது என்பதால், நேரடியாகவே பெண்களுக்கு அவை கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூற, அவையில் சிறு புன்னகைகளும், பார்வைகளும் பரிமாறப்பட்டன.

கையகப்படுத்தல் பற்றி பேசும்போது, நீரை பெறுவதற்காக பெண்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கும் பகுதிகள் பற்றிய கவனம் கொண்டுவரப்பட்டது. அத்தோடு அனர்த்த நட்ட ஈடுகள் மற்றும் ஊக்குவிப்புகள் வழங்கப்படும்போது, சிறு வீட்டு தோட்டங்களும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய பார்வையாக இருந்தது.

நீர் அனர்த்த/அபாய ஆய்வாளரான டாக்டர். கிரிராஜ் அமர்னாத், கிராமம், விவசாயம் மற்றும் வானிலை எதிர்வுகூறல் பற்றி பல சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். “நவீன தொழில்நுட்பங்கள்” – “கிராமங்கள்” இந்த இரண்டையும் இணைப்பது இவரது உரையின் சாராம்சமாக அமைந்தது.

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தின் விவசாய கிராமங்களில் அல்லது தாலுக்காக்களில், சுமார் 6௦௦௦ க்கும் அதிகமான வானிலை அறியும் மையங்கள் செயல்படுகின்றன. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், இப்போது அந்த கிராமத்தின் வானிலை பற்றி, விவசாயி மூலமே அறிந்துகொள்ளவும், அறிவுறுத்தவும் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலைக்கு ஏற்ற அல்லது வானிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய உகந்த விதைகளை உருவாக்குதல் பற்றி பேசுகையில், பங்களாதேஷில் வெள்ளம் வந்தாலும் ஈடுகொடுக்கக்கூடிய நவீன ரக அரிசியை பயன்படுத்தப்படுவது பற்றி குறிப்பிட்டார்.

இதனை “climate smart agriculture” –“காலநிலைக்கேற்ற புத்திசாதுர்யம் மிக்க விவசாயம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

குறிப்பிட்ட ஒரு முறையை மட்டும் பயன்படுத்தாமல், காலநிலை எதிர்வுக்கூறலுக்காக பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் தொகுக்கப்பட வேண்டும், அனைத்து வகைகளிலும் தரவுகள் பெறப்பட்டு, ஒரு ஒன்றிணைந்த எதிர்வுகூறல் வெளியிடப்படவேண்டும், தொழில்நுட்பங்களும், அவற்றின் பயன்பாடுகளும் கிராமிய மட்டத்திற்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும், போன்ற கருத்துக்கள் அதிக வரவேற்பை பெற்றன.  

கேள்வி-பதில் நேரத்தில், பலர் தமது கருத்துக்களை முன்வைத்ததோடு, குறிப்பிடத்தக்க  சில கேள்விகளையும் தொடுத்தனர்.

·         செயற்கை மழை பொழியவைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?

“இலங்கையில் மழைவீழ்ச்சியின்மை என்கிற ஒரு பிரச்சினை இல்லை. நான் இப்போது சூடானிலிருந்து வருகிறேன்; அதனோடு ஒப்பிடுகையில் இங்கே மழைவீழ்ச்சியின்மை என்பது பிரச்சினையே இல்லை” - டாக்டர். திமோத்தியெஸ் கெஸ்பீக் (Dr Timotheus Gaasbeek)

·         இறப்பர் பயிர்களுக்கு பதிலாக தென்னை இன தாவரங்கள் பயிரிடப்படுவது போன்ற ‘பயிர் மாற்றீடுகள்’ பற்றிய உங்கள் கருத்து என்ன?”

“பயிர் மாற்றீடு பற்றி பேசுவதற்கு முதலில் ஒரு புள்ளிவிபரத்தை கருத்தில் கொள்ள வேண்டும், ஒரு பயிர் வளர்ந்து விளைபொருள் தருவதற்கு அவசியமாகிற நீரை “virtual water” – “மெய்நிகர் நீர்” என்று அழைக்கிறோம். அப்படி பார்க்கும்போது, சாதாரணமாக நெல் பயிர்களுக்குத்தான் அதிக நீர் தேவைப்படுவதாக நினைக்கலாம். ஆனால், புள்ளிவிபரவியல் திணைக்களத்திலிருந்து பெற்ற தகவல்களின்படி, நெற்பயிரை விடவும், தேயிலை மற்றும் இறப்பருக்கு மிக அதிகளவிலான நீர் தேவைப்படுகிறது”. - டாக்டர். பி. பி. தர்மசேன தர்மசேன (Dr P. B. Dharmasena)

நீர் எல்லோருக்குமானது; ஆனால் அதனை ஒரு குறிப்பிட்ட அமைப்பே நிர்வாகம் செய்கிறது. நீர் முகாமைத்துவத்திற்கென்று கொள்கைகளும், செயல்திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். வலைய, மாவட்ட, தேசிய என்று பல மட்டங்களில் அவை அணுகப்படவேண்டும். அது அரசியலிலிருந்து விடுபடவேண்டும் போன்ற கருத்துக்களோடு, இறுதியில் “நீர் முகாமைத்துவம் தனியார்மயப்படுத்தப்பட வேண்டுமா?” - என்பது கேள்விக்காக விடப்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கும் சற்று மேலதிகமான காலத்தில் நிகழ்ந்த இந்த கலந்துரையாடல், அதன் நோக்கத்தில் வெற்றியீட்டியதென்றே சொல்லலாம். அமர்வில் பங்குகொள்ள கிடைத்தமையானது என்னிலும் பல புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டது. இத்தகைய நிகழ்வுகளும், அதன் பயனாக நிகழவேண்டிய செயல்திட்டங்களும் சேர்ந்து முன்னேற்றகரமான நகரம் மற்றும் நாட்டினை வடிவமைக்க உதவும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.  

 

உயிர்

 

ஏஞ்சலஸ் விபாகர் தற்போது சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பில் தொழில்நுட்ப அலுவலகராக பணியாற்றுகிறார். மேலும் விஜய செய்தித்தாள் நிறுவனத்தின் (Wijeya Newspaper Ltd.) எழுத்தாளர் ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் இலங்கையின் தன்னார்வ பணிப்படையின் அங்கத்தவராக செயற்படுவதோடு சமூக ஊடகங்களுக்கு உள்ளடக்கம் வழங்கும் பதிவராகவும் செயற்றப்படுகிறார்.

 

 

Icon of SDG 13

UNDP Around the world

You are at UNDP Sri Lanka 
Go to UNDP Global