--- Image caption ---

இன்றைய சமூகத்தில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறைத் தீவிரவாதம் என்பன மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றது. எம்முடைய இந்த பூமியில் பல இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் என்பன காணப்படுகின்றன. அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு இல்லாது ஒரு இனத்தையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ அவமதிப்பது மனிதர்களுக்கிடையே மோதல் நிலைமைகள் உருவாக வழி வகுக்கின்றது. ஆகவே மனிதர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர்களிடையே இவ்வாறான பிரச்சினைகளை கலந்துரையாடுவது இன்றைய சூழலில் மிக அத்தியாவசியம் ஆகும். அந்த வகையிலே இந்த PVE (Preventing Violent Extremism) இணையவழிக் கற்கைநெறி மாணவர்களுக்கு மத்தியில் நல்லதொரு அறிவொன்றை கட்டி எழுப்பி உள்ளது. சிறந்த விரிவுரையாளர்கள் மூலம் இந்த கற்கை நெறி நடத்தப்பட்டது என்பதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும்.

அது மட்டுமல்லாமல் இதற்கு அவசியமான நூல்கள் மற்றும் ஏனைய தரவுகளும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் புதிய வார்த்தைகள் மற்றும் சிரமமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் விளக்கம் தரப்பட்டிருந்தது. இவற்றின் மூலம் மிகச் சிறப்பாக இந்த கற்கைநெறியை தொடரக் கூடியதாய்   அமைந்தது. மேலும் ஒரு சட்டம் பயிலும் மாணவியாக இந்தக் கற்கைநெறியின் வாயிலாக பல்வேறு புதிய தகவல்களை என்னால் கற்றுக்கொள்ள முடியுமாய் இருந்தது.

சமூக வலைத்தளம் என்பது பலரால் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கு மொழி, இனம் என்ற பாகுபாடு அவசியமில்லை. அவ்வாறான ஒரு தளத்தினை வன்முறையான கருத்துக்களைப் பதிவிடப் பயன்படுத்தும் போது அது மேலும் தீவிரவாத சிந்தனையை எல்லோர் மத்தியிலும் வளர்க்கும் என்பது இந்தக் கற்கை நெறியின் மூலம் கற்றுக்கொண்டேன் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன். இன்று நிறப் பாகுபாடு மற்றும் இனப் பாகுபாடு என குறிப்பிட்ட சமூகத்தை புறந்தள்ளும் பல்வேறு சம்பவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கறுப்பின சகோதர சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களும் மறக்க முடியாது. மேலும் பல்லின சமூகங்கள்   வாழும் பட்சத்தில் சட்டம் சகலரையும் சமமாக மதிக்க வேண்டும்.    எல்லோரினதும் உரிமைகள் சுதந்திரம் என்பது மதிக்கப்பட வேண்டும். அதற்காக  வேண்டியே இன்று உலக நாடுகள் பல்வேறு சமவாயங்களை அறிமுகம்  செய்துள்ளன. அவை அனைத்தும் இந்தக் கற்கைநெறி மூலம் மாணவர்களுக்கு கொண்டு  செல்லப்பட்டது என்பதே  உண்மையாகும்.

மேலும் எம்முடைய இளைய சமுதாயத்தினரை இவ்விடயம் தொடர்பாக விழிப்புணர்வூட்டுவது அவர்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை  மேம்படுத்தும். அந்த வகையிலே இந்த இணையவழிக் கற்கைமுறை எமக்கு மிக பயனளித்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதன் மூலம் சமாதானமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை உறுதிப்படுத்தலாம். மேலும் இவற்றிக்குச் சான்றிதழ்கள் வழங்கி எம்மை ஊக்குவித்தமைக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். பெறுமதியான அறிவொன்றை இந்த இக்கட்டான  சூழலுக்கு மத்தியிலும் எமக்களித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.


***

சமத்துவம் மற்றும் நீதிக்கான மையத்தால் செயல்படுத்தப்பட்ட இத் திட்டமானது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வன்முறை தீவிரவாதத்தை தடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும்  இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்படுகிறது.

முனீஸ்வரன் திவாகரனி இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டதாரி படிப்பினை மேற்கொள்கிறார்.

UNDP Around the world

You are at UNDP Sri Lanka 
Go to UNDP Global